சிஎஸ்ஐ பேராயர் ஜெபசந்திரனை பணியமர்த்த கோரி ஆர்ப்பாட்டம்
திங்கள் 29, ஜூன் 2015 5:21:04 PM (IST)
தூத்துக்குடியில் சிஎஸ்ஐ பேராயர் ஜெபசந்திரனை பணியமர்த்தக்கோரியும், சினாட் மாடரேட்டர் தேவாசீர்வாதத்தை கண்டித்தும் சிஎஸ்ஐ கிறிஸ்தவ அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தூத்துக்குடி நாசரேத் திருமண்டல பேராயர் ஜெபசந்திரனை பணியமர்த்தக் கோரியும், சினாட் மாடரேட்டர் தேவாசீர்வாதத்தை கண்டித்தும் அகில இந்திய கிறிஸ்தவ உரிமை இயக்கம் சார்பாக தூத்துக்குடியில், திருச்செந்தூர் ரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மதுரை இறையியல் கல்லுாரி முன்னாள் முதல்வர் தியான்சந்த் கார் தலைமை வகித்து கண்டனஉரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், துாத்துக்குடி நாசரேத் திருமண்டல பேராயர் ஜெபச்சந்திரன், தமிழக திருச்சபைகளில் உள்ள பேராயர்களில் மிகவும் நேர்மையானவர், உண்மையானவர், கடவுளுக்கும், மனசாட்சிக்கும் பயந்து பணிசெய்யக் கூடியவர். திருச்சபையின் நிர்வாகத்திலும், ஊழியத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். திருச்சபைகளின் அநீதிக்கு துணை போகவில்லை என்ற காரணத்தால் தென்னிந்திய திருச்சபையின் சினாட் அமைப்பு, திருச்சபை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பேராயர் ஜெபச்சந்திரனை பணி நீக்கம் செய்து 2.5 ஆண்டுகள் ஆகியுள்ளன.
மேலும் ஆளுங்கட்சி சர்வாதிகாரம் இவர் மீது பொய் வழக்கை போட்டு இவரை பணி செய்யவிடாமல் அலைக்கழித்து வருகின்றனர். இந்த படுபாதக செயலுக்கு சினாட் மாடரேட்டர் தேவாசீர்வாதம் உடந்தையாக இருந்து வருகிறார். இவர் மீது பல்வேறு ஊழல் புகார்கள் உள்ளன. ஆந்திர மாநிலத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமெரிக்க மிஷன் கொடுத்த 35 கோடியில் 25 கோடியை ஊழல் செய்து வழக்கில் சிக்கியவர் இந்த மாடரேட்டர்.
மதுரை பேராயத்தில் பேராயராக போட்டியிட்டு பேனலில் கூட வரமுடியாத ஜேசுசகாயம் என்பவரிடம் லஞ்சப்பணத்திற்கு விசுவாசமாக பேராய கமிஷரி என்ற பெயரில் அவரை பணியமர்த்தி திருச்சபைக்கு எதிராக நிர்வாகம் செய்து வருகிறார். தேர்தலில் பணி நியமனங்களில் தமிழர்களை தரம் தாழ்ததி தமிழ் விரோத போக்கையும் கட்டவி்ழ்த்து உள்ளார். எனவே பேராயர் ஜெபச்சந்திரனை உடனடியாக பணியமர்தத வேண்டும். சினாட் மாடரேட்டர் ஊழல் குற்றவாளி தேவாசீர்வாதம் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் பேசினர்.
இதில், பெடரல் சர்ச் ஆப் இந்தியா தலைவர் மரியராஜ், கிங்ஸ் சர்ச்சஸ் இந்தியா தலைவர் எட்வர்டு ராஜன், தலித் விடுதலை இயக்க மாநில பொதுச் செயலாளர் டேனியல் ஞானசேகரன், அகில இந்திய கிறிஸ்தவ உரிமை இயக்க தலைவர் சாம் தேவதாஸ், தெற்கு மாவட்ட திமுக நிர்வாகி வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல், சாத்ராஜ், மாமல்லன், சாலமோன் ஜார்ஜ், பாஜக எம்.ஆர். கனகராஜ், பாமாக வழக்கறிஜர் பிரிவு ரசல், உட்பட சிஎஸ்ஐ கிறிஸ்தவ அமைப்புகளைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.
Advertisements
பின்னூட்டமொன்றை இடுங்கள்