Skip to content

அமெரிக்கன் கல்லூரி சி.எஸ்.ஐ. பேராயர் மெகா மோசடி

ஜூன் 21, 2010

ஜூனியர் விகடனில் …
மதுரையை உலுக்கும் மெகா மோசடி…

அபேஸ் குற்றாச்சாட்டில் ஆசிர்!

”இதுபோன்ற நெருக்கடியான சூழலை நாம் முன்பு ஒருபோதும் சந்தித்ததில்லை. வேகமாகச் செயல்பட வேண்டிய தருணம். இது ஒரு போர்க்களம். இதில் வெற்றி பெற்றே தீருவோம்…”

– ஓர் அரசியல் தலைவரின் உணர்ச்சி முழக்கமல்ல இது… ‘என்னய்யா, இந்த சமாசாரம் உனக்கு தெரியாம போச்சேய்யா’ என்று நகைச்சுவையாகப் பேசும் பட்டிமன்ற புகழ் சாலமன் பாப்பையாவிடம் இருந்துதான் இப்படி அனல் வார்த்தைகள் தெறித்திருக்கின்றன.

புகழ்பெற்ற மதுரை அமெரிக்கன் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தைத் தனியாருக்கு விற்கப் போவதாகப் பரவிய தகவலையடுத்து, அதிர்ச்சியடைந்த அமெரிக்கன் கல்லூரியின் முன்னாள் பேராசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் கடந்த 16-ம் தேதி மாலை நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில்தான் சாலமன் பாப்பையா இப்படி முழங்கினார். இவர் அந்தக் கல்லூரியின் முன்னாள் தமிழ்த்துறைப் பேராசிரியர்.

அமெரிக்கன் கல்லூரி 127 ஆண்டு காலப் பாரம்பரியம் மிக்கது. 1881-ல் ‘அமெரிக்கன் போர்ட் ஆஃப் கமிஷனர்ஸ் ஃபார் ஃபாரின் மிஷன்’ என்ற அமைப்பால் இந்தக் கல்லூரி நிறுவப்பட்டது. இதன் சொத்துக்களை மதுரை
சி.எஸ்.ஐ. பேராயரான கிறிஸ்டோபர் ஆசிர், தனியா ருக்கு விற்க முயற்சிப்பதாக இப்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய சாலமன் பாப்பையா, ”பேராயர் கிறிஸ்டோபர் ஆசிர் தன்னிச்சையாக முடிவெடுத்து தன் மருமகன் தவமணி கிறிஸ்டோபரை கல்லூரியின் நிதிக் காப்பாளராக நியமித்துள்ளார். அவரை வைத்துக் கொண்டு பேராயர் நிறைய தவறுகளைச் செய்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளில் அந்தக் கல்லூரியின் கையிருப்பாக இருந்த மூன்றே கால் கோடி ரூபாய் செலவாகி இருக்கிறது. இப்போது அதே தொகை கடனாக உள்ளது. இந்த நிலையில் கல்லூரி மைதானத்தை விற்க திட்டமிட்டுள்ளனர். உயிரே போனாலும் சரி… கல்லூரியின் ஒரு அங்குலத்தைக்கூட விற்க அனுமதிக்க மாட்டோம்…” என்று அனல் பறக்கப் பேசினார்.

இதைத் தொடர்ந்து, அந்தக் கூட்டத்திலேயே ‘அமெரிக்கன் கல்லூரி பாதுகாப்பு கமிட்டி’ உருவாக்கப்பட்டது. கமிட்டி தலைவராக சாலமன் பாப்பையாவும் நிர்வாகிகளாக அமெரிக்கன் கல்லூரியின் முன்னாள் பேராசிரியர்கள் வின்ஃப்ரட், பார்த்தசாரதி, வசந்தன், ‘பீப்பிள்ஸ் வாட்ச்’ இயக்குநர் ஹென்றி டிஃபேன் ஆகியோரும் தேர்ந் தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

கூட்டத்தில் பேசிய ஹென்றி டிஃபேன், ”மதுரையில் பல்வேறு வகையிலும் செல்வாக்கு பெற்ற ஒரு கும்பலோடு கைகோத்துக் கொண்டு பேராயர் கிறிஸ்டோபர் ஆசிர், அமெரிக்கன் கல்லூரி யைக் கூறுபோட்டு விற்க முயல்கிறார். இந்தக் கல்லூரியின் ஒரு சென்ட் நிலம் அந்தக் கும்பலிடம் சென்றுவிட்டாலும் மதுரையிலுள்ள புகழ்பெற்ற அத்தனை பொதுச் சொத்துக் களையும் அந்தக் கும்பல் அபகரிக்கத் தயங்காது. மக்கள் சக்தியைத் திரட்டி இதை நாம் தடுத்தாகவேண்டும்…” என்றார் காட்டமாக.

முன்னாள் பேராசிரியர் வின்ஃப்ரட் பேசும்போது, ”கல்லூரியின் முதல்வராகவும், செயலாளராகவும் சின்னராஜ் ஜோசப் ஜெயக்குமார் இருக்கிறார். கல்லூரியின் சொத்துக்களை விற்க வேண்டுமானால் இவருடைய ஒப்புதல் தேவை. ஆனால், சொத்தை விற்க அவர் ஒப்புக்கொள்ளவில்லை. அவரை நீக்கினால் சொத்துக்களை எளிதாக விற்று விடலாம் என்று பேராயர் கிறிஸ்டோபர் ஆசிர் மனக்கணக்குப் போடுகிறார். இதனால் அவர் கடந்த 12-ம் தேதி கல்லூரி முதல்வர் இல்லாத நேரமாகப் பார்த்து தன்னுடைய மருமகனையும் துணை முதல்வர் ஜார்ஜ் செல்வக்குமாரையும் ஏவிவிட்டு போலீஸாரையும் கல்லூரிக்குள் வரவழைத்து முதல்வரின் அறைக்குப் பூட்டுப் போட்டிருக்கிறார்” என்று குற்றம் சாட்டினார்.

மற்ற முன்னாள் பேராசிரியர்களான பார்த்தசாரதியும் வசந்தனும், ”இம்மாதம் 19-ம் தேதி கல்லூரி நிர்வாகத்தில் 100 சதவிகிதம் கிறிஸ்துவர்கள் மட்டுமே இருக்கும்படியான ஒரு குழு அமைத்து கல்லூரியை மதுரை-ராமநாதபுரம் திருமண்டலத்துடன் இணைக்க முயற்சிக்கிறார் பேராயர். அதே நாளில் நாமும் மதுரை தல்லாகுளத்தில் இந்த சூழ்ச்சியை மக்களிடம் விளக்கும் விதமாகக் கூட்டம் நடத்துவோம்” என்றனர்.

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கல்லூரியின் முதல்வர் சின்னராஜ் ஜோசப் ஜெயக்குமாரிடம் பேசினோம். ”பேராயர் என்பவர் இந்தக் கல்லூரியின் ஆட்சி மன்றக் குழுவில் ஒரு கௌரவப் பதவியில் இருப்பவர் மட்டுமே. ஆனால், அவர் தன்னைக் கல்லூரியின் உயர் பொறுப்பில் இருப்பவர் போலவும், அதிகாரம் மிக்கவர் போலவும் நினைத்துக்கொண்டு தன்னிச்சையாகச் செயல்பட்டு, கல்லூரியின் சொத்துக்களை விற்க முயல்கிறார். இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது” என்றார்.
பேராயர் கிறிஸ்டோபர் ஆசிரிடம் அவருடைய மொபைல் போனில் தொடர்புகொண்டு பேசினோம். ”நான் பேராயராகப் பொறுப்பேற்ற பின் இரண்டு பி.எட். கல்லூரிகள், ஒரு நர்ஸிங் கல்லூரி, ஒரு பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றை ஏற்படுத்தியிருக்கிறேன். இப்படிப் புதிய சொத்துக்களை உருவாக்கும் நான், இருக்கும் சொத்துக்களை விற்பேனா..? அதுவுமில்லாமல் நிதி மற்றும் சொத்துப் பராமரிப்பு கமிட்டிக்குப் பொறுப்பானவர் முதல்வர்தான். சொத்துக்களை விற்க எனக்கு அதிகாரம் இல்லை. முதல்வரின் நிர்வாகச் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. இதுவரை அவர் கடந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டையே தாக்கல் செய்யவில்லை. இந்த நிலையில் அவர் வெளிநாடு செல்ல விடுப்பு கேட்டார். ‘வெளிநாடு சென்று திரும்பும்வரை பொறுப்புகளைத் துணை முதல்வரிடம் கொடுத்துவிட்டுச் செல்லுங்கள்’ என்றேன். அதற்குள் நான் சொத்துக்களை விற்க முயல்வதாகக் கற்பனையாக என் மீது குற்றம் சாட்டுகிறார். மற்றபடி, கல்லூரி முதல்வரின் அறைக்குப் பூட்டுப் போடப்பட்டது தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது” என்றார்.

இதற்கிடையே கல்லூரி முதல்வர் சின்னராஜ் ஜோசப் ஜெயக்குமார், ‘தல்லாகுளம் க்ரைம் இன்ஸ்பெக்டர் ஜஸ்டின் பிரபாகரன் அத்துமீறி கல்லூரிக்குள் புகுந்து, துணை முதல்வருடன் சேர்ந்துகொண்டு என் அறையைப் பூட்டினார்’ என்று போலீஸ் கமிஷனர் நந்தபாலனிடம் புகார் கொடுத்திருக்கிறார். முன்னாள் பேராசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் கொண்ட அமெரிக்கன் கல்லூரி பாதுகாப்பு கமிட்டியினர், ‘அரசியல்-அதிகார சக்திகளின் உதவியோடு அமெரிக்கன் கல்லூரியை ஆக்கிரமிக்க முயற்சி நடக்கிறது. இதற்குப் பேராயர் கிறிஸ்டோபர் ஆசிர் உடந்தை. எனவே, எங்களுடன் இணைந்து கல்லூரியைக் காப்பாற்றுங்கள்’ என்று முக்கிய பிரமுகர்கள், கல்லூரி மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ்-களை அனுப்பிவருகின்றனர்.
Posted by தருமி

Advertisements
பின்னூட்டமொன்றை இடுங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: